நீரிழிவுக்கு நிவாரணம் தரும் கீரை
கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு எந்த நோயும் வராது. கீரைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால், கீரை உணவு எளிதில் ஜீரணமாகும். கீரைகளில் கொழுப்புச் சத்தும், கார்போஹைட்ரேட்டும் குறைந்த அளவிலேயே அமைந்துள்ளன. தாதுப் பொருட்களும், விட்டமின்களும் அதிகம் உள்ளன. விலை மலிவு என்பதோடு அன்றாடம் ஃபிரஷ்ஷாக கிடைக்கும் என்பதால், கீரைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். ஒரு கீரைக்குத்தான் என்று இல்லை எல்லாக் கீரைகளுக்கும் மருத்துவக் குணம் உண்டு.
முருங்கைக் கீரை அதிக இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை விருத்தி செய்யும். இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உள்ளது. இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் வராமல் தடுக்கலாம். தாது புஷ்டிக்கு தனி அத்தாரிட்டி முருங்கைக் கீரைதான். விந்தைப் பெருக்க வீரியம் உள்ள இந்தக் கீரையை ‘விந்து கட்டி’ என்றும் சொல்வார்கள்.
முருங்கை கீரை ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தம் சுத்தமானால் எந்த நோயும் நம்மை அண்டாது. இதில், விட்டமின் ஏ, சி, சத்து உள்ளது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களும் இதில் உள்ளன. விட்டமின் ஏ குறைவால் பார்வைக் கோளாறு, மாலைக் கண் நோயால் பாதிக்கப்படுபவர்கள் முருங்கை கீரையை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மூட்டு வலி, இருமல், சிறுநீர் கோளாறுகள், ரத்த அழுத்தம், ரத்த சோகை, உடல் சூடு பிரச்னைகளுக்கும் முருங்கை கீரை நல்ல நிவாரணம் அளிக்கும்.
இந்தக் கீரையை கடைத் தெருவுக்கு சென்று அலைந்து திரிந்துதான் வாங்க வேண்டும் என்றில்லை. நம் வீட்டிலேயே ஒரு ஓரமாக முருங்கை மரம் வளர்த்து அதில் இருந்து முருங்கை கீரையை பறிக்கலாம். அல்லது பக்கத்து வீட்டில் இருந்தும் பிரஷ்ஷாக வாங்கிக் கொள்ளலாம்.
வெந்தயக் கீரையில், விட்டமின்களும் தாது உப்புகளும் அதிகமாக உள்ளன. வெந்தய விதையின் மூலம் பயிரிடப்படும் இது மூன்றே மாதங்களில் பலன் தந்து விடும். இளம் பச்சை நிறம் உள்ள இதை, வீட்டுத் தோட்டம், தொட்டியிலும் எளிதாக வளர்க்கலாம். வெந்தயக் கீரையை துவரம் பருப்புடன் வேக வைத்து கூட்டாக செய்து சாப்பிடலாம். இதனுடன் புளியை சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.
வெந்தயக் கீரை செரிமான சக்தியை அதிகரித்து, பசியை தூண்டுகிறது. சிறுநீரகத்தை சுத்தம் செய்வதோடு, மூளை நரம்புகளை பலப்படுத்துகிறது. சொறி, சிரங்கால் அவதிப்படுபவர்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம். பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் வெந்தயக் கீரை மிகவும் ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. நீரிழிவு நோய்க்காரர்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும். கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலில் இருந்து வெளியேற்றும். வயிறு சம்பந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும் வெந்தயக் கீரை சிறந்த மருந்து.
பாலக் கீரை உடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கலை போக்கும். குடல் நோயால் அவதிப்படுபவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம். பாலக் கீரையை தொடர்ந்து சாப்பிடுபவர்களிடம் குடல் நோய் அண்டவே அண்டாது.
தண்டுக் கீரை, சாதாரணமாக தோட்டத்தில் விளையும். இதில் செங்கீரை, வெண்கீரை என இரண்டு வகை உண்டு. இந்தக் கீரையின் இலை, தண்டு, வேர் என அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்ற கீரைகளைப் போலவே இந்தக் கீரையிலும் நீர்ச்சத்து அதிகம் உண்டு. நார்ச்சத்தும் அதிகம். தண்டுக் கீரை மலத்தை இளக்கும் தன்மை உடையது. மலச்சிக்கலையும் மறையச் செய்யும்
Comments