எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???
உலக நாடுகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமும் பண்பாடும் உலகமே போற்றும் கலாச்சாரமும் நமக்கே உரியது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நாம், அந்த பெருமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மிக மோசமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிக்கையில் மனம் வேதனை அளிக்கிறது. பெண்ணை போகப்பொருளாய் பார்க்கும் உலகில் பெண்ணை தெய்வமாய் மதிப்பதோடு பூமித்தாய் என்று பூமியை பெண்ணுக்கு ஒப்பாய் வணங்கி வரும் நமது பண்பாடும் கலாச்சாரமும் ஒரு சில பெண்களால் சீரழிந்து வருகிறது. மது அருந்துவது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகின்ற இவ்வேளையில் தான் ஆண்களுக்கு சமமாக நாங்களும் மது அருந்துகிறோம் என்று பெண்களில் சிலர் அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவிகள் இந்த மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆகி வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனாலும் ஆண்களே கூட மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான கருத்து அப்படி இருக்கையில் குடும்பத்தின் ஒளிவிளக்காக திகழும் பெண்கள் இந்த விஷயத்தில் ஆண்களுக்கு நிகர் நாங்கள் என்று மதுவை கையிலெடுத்து இருப்பது வருந்தக்கூடிய செயலாகும். பெண்கள் மது அருந்துவதால் மிகப்பெரிய உடல்கூறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை அவர்கள் அறியாதவர்களாய் இருக்கிறார்கள், குறிப்பாக கல்லூரி மாணவிகள் வரும் காலத்தில் தங்களது இல்லற வாழ்கையை துவங்கும் நேரத்தில் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனைகளும் கர்ப்பம் தரித்த பின்பு பிறக்க போகும் குழந்தைக்கு பிரச்சனைகள் வரும் என்பதை அறிந்திருந்தால் பெண்கள் மதுவை தொட மாட்டார்கள், இப்படிப்பட்ட விழிப்புணர்வுகளை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.
மட்டுமல்ல பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர மிகவும் பெரும் காரணியாக இந்த மது அமைகிறது என்று 2004 ஆம் ஆண்டு (WHO) உலக சுகாதார அமைப்பு ஆராய்ந்து எச்சரித்து இருக்கிறது , மேலும் மது தொடர்பான உடல்நல குறைவுகளால் 2011ஆம் ஆண்டு மட்டும் 26,000 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதே நேரம் ஆண்கள் 48,000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படி பெண்கள் ஆண்களுக்கு நிகராய் மதுப்பழக்கத்துக்கு ஆளாகி வருவது அவர்களது சந்ததியே பாதிக்கும் என்பதை அறியாது இருக்கிறார்கள். இது குறித்து மத்திய அரசு உடனடியாக ஒரு முடிவுக்கு வந்து பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் குடிப்பழக்கத்துக்கு ஆளாவதை தடுக்க அவசர சட்டம் போட்டாக வேண்டும் இல்லையேல் இந்திய பண்பாடு கலாச்சாரம் என்று பெருமை பேசுவதை நாம் வெகு விரைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
Comments