கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!
கிறிஸ்துமஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக், தடபுடல் விருந்துதான். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கிய பின்னணியும், அதில் ஏற்பட்ட பல மாறுதல்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர். எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான். அதன்பிறகு கிபி 855ம் ஆண்டு இட்முண்ட் என்ற தியாகி மன்னராக மூடி சூட்டப்பட்டான். கடந்த 1066ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாக கொண்டாடினார். கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு "கிறிஸ்துமஸ் தீவு" என்று பெயரிடப்பட்டது.
இப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வதும், போட்டிகளை நடத்துவது என்று பல கோணங்களில் கொண்டாட்டம் விரிவடைந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியது. கடந்த 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துவர்கள் குழுக்களாக சேர்ந்து கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடப்படுவது வழக்கம். கடந்த 1847ம் ஆண்டு பிரான்சில் தான் முதல் முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கேரலில் "ஓ ஹோலி நைட்" என்ற பிரபல கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டதாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. பண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும். மேலும் சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறி கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளது. பண்டைய காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்களுக்கு பேய், பிசாசு, அசுத்த ஆவிகள் உள்ளிட்டவைகளுக்கு அதிகமாக பயந்தனர். வருடத்தில் நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை மக்களுக்கு தீமை விளைவிக்கும் என்று நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். மொத்தத்தில் நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயேசு பெருமானை இறைஞ்சி, துதி பாடி மகிழ்கின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்.
Comments